சாலை கிராமத்தில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலை கிராமத்தில் பொதுமக்களின் நலன் கருதி ரூபாய் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கடந்த 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சாலை கிராமத்தை சுற்றியுள்ள இளையான்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் மக்கள் வந்து செல்வதால், இப்பகுதியில் ஒரு வசதியான பேருந்து நிலையம் நீண்ட காலமாக தேவையாக இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய பேருந்து நிலையம் சேதமடைந்த நிலையில், திமுக ஆட்சியில் முதல்வரின் உத்தரவின் பேரில் நிதி ஒதுக்கப்பட்டு இந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் புதிய பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் திமுக தலைமையிலான கழக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்தார்.
மேலும், சாலை கிராமத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்திருந்தார். இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அந்த ஆய்வக கட்டிடத்தையும் பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் ஆய்வக வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு செல்வராஜ், திமுக செயலாளர் நைனா முகமது, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தனசேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் கண்ணன்



