சிவகங்கைமாவட்டச் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவு மர்ம நுழைவு – சாக்குகள், எடை மெஷின்கள் திருட்டு? வைரல் வீடியோ பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பிசர் பட்டிணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாக்குகள் மற்றும் எடை மெஷின்களை தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விவசாய சீசனில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கொள்முதல் மையத்தில் நடந்ததாக தெரிவிக்கப்படும் அந்த வீடியோ வெளியாகியதை தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சிவகங்கை மண்டல மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ புகார் எங்களிடம் வரவில்லை. அலைபேசி மூலம் தகவல் கிடைத்ததையடுத்து ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், அந்த கொள்முதல் நிலையத்தைச் சுற்றி முன்பே பல புகார்கள் வந்ததாகவும் கூறினார்.
புகார்களின் அடிப்படையில் அங்கு பணிபுரிந்த பருவகால பட்டியல் எழுத்தர் தேன்மொழி மீது இரண்டு ஆண்டுகள் ‘பிளாக் லிஸ்ட்’ நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மேற்பார்வையாளர் ராமமூர்த்திக்கு ‘ஷோக்காஸ் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சாக்கு மூட்டைகளை எடுத்துச் சென்று நேரடியாக வியாபாரிகள் கையிருப்பு வைத்துள்ள இடங்களில் தரச் சோதனை இல்லாமல் நெல் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல புகார் மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
விவசாயிகள் குறைந்த விலையில் வியாபாரிகளிடம் நெல் விற்க வேண்டாம் என்பதற்காக அரசு நேரடி கொள்முதல் மையங்களை அமைத்துள்ள நிலையில், சில மையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை முறைகேடாக வசூலிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டும், விவசாயிகளிடமிருந்து கூடுதல் பணம் பெறப்படுவது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மேற்பார்வையாளர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், இதுபோன்ற முறைகேடுகள் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால்தான் இத்தகைய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியாகிய பிறகும் எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதேபோல், வியாபாரிகளிடமும் விதிமுறைகளை மீறி நெல் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையில் அதே கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்பட்டதா? இது திருட்டு சம்பவமா அல்லது திட்டமிட்ட முறைகேடா? என்பதனை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
தற்போது சிவகங்கை மாவட்டம் முழுவதும் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்தியாளர் கண்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button