கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்; 18 மாணவர்கள் படுகாயம் – கரூரில் கோர விபத்து
கரூரில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கரூரில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, நேற்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஜல்லிப்பட்டி வழியாகச் சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் பெரியசாமி பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார்.
குளத்தூர் அருகே உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை பேருந்து கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்திலேயே பேருந்து பழுதாகி நின்றது. அதே நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி பகுதியிலிருந்து சிமெண்ட் ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயில், பேருந்தின் மீது பலமாக மோதியது.
ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பேருந்தை விட்டு அவசர அவசரமாக கீழே குதித்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் ரயில் மோதியதில் பேருந்து உருக்குலைந்தது. 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். 21 மாணவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.



