66 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% - 7% வரை உயருவதால், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் செலவு காத்திருக்கிறது. மாநிலத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில் 66 சாவடிகளில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த வருடாந்திர கட்டண உயர்வு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலை குறியீட்டெண் அடிப்படையில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும். மேலும், கார் மற்றும் ஜீப் போன்ற தனியார் வாகனங்கள் அடிக்கடி பயன்படுத்துவதற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கட்டணமும் 3,000 ரூபாயிலிருந்து 3,075 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களின் கவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர். வாடகை கார் உரிமையாளர்கள் தரப்பில் பேசுகையில், ஏற்கனவே டீசல் விலை உயர்வு மற்றும் ஓட்டுநர் ஊதியம் போன்றவற்றால் பயணக் கட்டணம் பெருமளவு உயர்ந்துள்ள நிலையில், இந்த சுங்கக்கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறும் என்று அஞ்சுகின்றனர். இதனால் மக்கள் வாடகை கார்களில் பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, வந்தே பாரத் போன்ற ரயில் சேவைகளை நோக்கி நகரக்கூடும் என்றும், வாடகை வாகனங்களுக்குச் சிறப்புச் சலுகை அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுகர்வோர் நல ஆர்வலர்கள் தரப்பில் பார்க்கும்போது, இந்த உயர்வு நேரடியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் உயரும்போது, அந்தச் சுமை நுகர்வோர் மீதே சுமத்தப்படும். அதேபோல், ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலையும் உயர வாய்ப்புள்ளது.
மறுபுறம், சாலைக் கட்டுமான செலவுகள் முடிவடைந்த பிறகும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படாமல் இருப்பதோடு, பராமரிப்புச் செலவு என்ற பெயரில் நிரந்தரமாகக் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த கட்டண உயர்வு கட்டுமானம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் பெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



